ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய்-குழந்தை சாவு

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்கள் பணியில் இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய்-குழந்தை சாவு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் கீர்த்திகா (வயது21).

இவருக்கும், சத்திரக்குடி அருகே உள்ள அரியகுடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகா, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊரான ஆர்.எஸ்.மடைக்கு வந்துள்ளார். பகலில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பாட்டுள்ளார்.

இந்த நிலையில் கீர்த்திகாவுக்கு மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்து உள்ளனர்.

அங்கு கீர்த்திகாவிற்கு குழந்தை இறந்து பிறந்ததாகவும், சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் குழந்தை மற்றும் கீர்த்திகாவின் உடல்களை டாக்டர்கள் வற்புறுத்தி விடியும் முன்னரே உறவினர்களிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் கீர்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஊர்மக்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

பிரசவத்திற்கு கீர்த்திகாவை அனுமதிக்க வந்தபோது டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், நர்சுகள் மட்டுமே இருந்ததாகவும், தாமதமாகவே டாக்டர்கள் வந்ததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.

மேலும் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் சமாதானபடுத்தியதை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவமனை டீன் அல்லி உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர், தாசில்தார் முருகவேல் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் முடிந்தபின்னர் 5-ந் தேதிக்குள் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கீர்த்திகா குடும்பத்தினருடன் நேரடி விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கீர்த்திகா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் வீரராகவராவை நேரில் சந்தித்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுசம்பந்தமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

கீர்த்திகா உயிரிழந்தது தொடர்பாக ராமநாதபுரம் மருத்துவமனை டீன் அல்லி, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com