

சேலம்,
தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாநில தலைவர் செந்தில் கூறியதாவது:- தமிழக அரசு டாக்டர்கள் கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான கால முறை முறை ஊதியம் வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் இதுவரை எந்த சாதகமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதைத்தொடர்ந்து வருகிற 22-ந் தேதி மதுரையிலும், 23-ந் தேதி சென்னையிலும் போராட்டம் நடத்தப்படும். இதேபோல் 24-ந் தேதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி மட்டும் செய்து மற்ற பணிகளை முற்றிலும் புறக்கணிக்கப்படும். அதாவது ஆய்வு கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள், காப்பீடு தொடர்பான செயல்கள் மற்றும் மற்ற நிர்வாக செயல்களை செய்ய மாட்டோம்.
தமிழகத்தில் 30 மற்றும் 31-ந் தேதிகளில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அப்போது அவசர உயிர்காக்கும் சிகிச்சைகள் மட்டும் தனி மருத்துவர்கள் குழு கொண்டு நடைபெறும். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.