தாலுகா அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவிகளை ஒப்படைக்க வந்த ரேஷன் கடை பணியாளர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவிகளை ரேஷன் கடை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாலுகா அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவிகளை ஒப்படைக்க வந்த ரேஷன் கடை பணியாளர்கள்
Published on

தேனி,

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் கடைகளுக்கு ஸ்மார்ட் கார்டை பதிவு செய்ய பி.ஓ.எஸ். என்ற பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் கைரேகை வைத்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால், இந்த கருவியில் கைரேகை சரியாக பதிவாகாததால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே இந்த கருவியில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும், இணையதள சேவைக்கு 4ஜி இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரேஷன் கடை பணியாளர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கிடையே தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பயோமெட்ரிக் கருவிகள் வேலை செய்யவில்லை என்றால் பொதுமக்களும், ரேஷன் கடை பணியாளர்களும் பாதிப்படைவார்கள். இதைத்தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பயோமெட்ரிக் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு பயோமெட்ரிக் கருவிகளை எடுத்துக்கொண்டு ரேஷன் கடை பணியாளர்கள் வருகை தந்தனர். பின்னர் அவர்கள், அந்த கருவிகளை தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் கருவிகளை பெற்றுக் கொள்ள அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு ரேஷன் கடை பணியாளர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தேனி தாலுகா அலுவலகத்துக்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாண்டி தலைமையில், தேனி ஒன்றிய செயலாளர் மருது மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் பயோமெட்ரிக் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலர் சவுடப்பனிடம் ஒப்படைக்க முயன்றனர். அவர் வாங்க மறுத்ததால், அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், "2ஜி இணைப்பு உள்ள கருவிகளை 4ஜி ஆக மாற்ற வேண்டும். இணையதள சேவையை சரிசெய்ய வேண்டும். பயோமெட்ரிக் கருவிகளை தரமானதாக வழங்க வேண்டும். பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com