ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பயங்கரம்: பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை இடமாறுதலாகி வந்த 2 நாளில் சக வீரர் வெறிச்செயல்

ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் சக வீரரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் தலை சிதறி பரிதாபமாக பலியானார்.
ஆவடி ராணுவ தொழிற்சாலையில் பயங்கரம்: பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை இடமாறுதலாகி வந்த 2 நாளில் சக வீரர் வெறிச்செயல்
Published on

ஆவடி,

ஆவடி ரெயில் நிலையம் அருகே ராணுவத்திற்கு சொந்தமான படைஉடை தொழிற்சாலை, என்ஜின் தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இந்திய விமானப் படை பயிற்சி மையம், மத்திய பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து கனரக வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பீரங்கி கவச வாகனங்கள் மற்றும் ஊர்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலங்களை சேர்ந்த பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வெளிநபர்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் இயங்கி வரும் இந்த கனரக வாகன தொழிற்சாலையில், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 2 மணி நேரத்திற்கு ஒரு வீரர் என பாதுகாப்பு பணியில் வீரர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதன் பிறகு பாதுகாப்புபடை வீரருக்கு 6 மணிநேரம் ஓய்வு கொடுக்கப்படும். இந்த முறையில் இங்கு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தை சேர்ந்த நிலம்ப சின்ஹா (வயது 49) என்ற பாதுகாப்பு படை வீரர், மேகாலயா மாநிலத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து இந்த கனரக வாகன ராணுவ தொழிற்சாலையில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டார். கடந்த 28-ந்தேதி பணியில் சேர்ந்த அவருக்கு அதிக மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

நிலம்ப சின்ஹா நேற்று முன்தினம் இரவு 12 மணியிலிருந்து 2 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்தார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி கண்காணிப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, இமாசலபிரதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரரான கிரிஜேஷ்குமார் (40) உள்பட 5 பேர் தங்கள் ஓய்வு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென நிலம்ப சின்ஹா தான் வைத்திருந்த இன்சா ரகதுப்பாக்கியை எடுத்து ஓய்வு அறையை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் கிரிஜேஷ் குமாரின் தலை மற்றும் காது பகுதிகளில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

20 தோட்டாக்கள் கொண்ட அந்த துப்பாக்கியிலிருந்து 7 தோட்டாக்கள் சீறி பாய்ந்தது, இரண்டு தோட்டாக்கள் கிரிஜேஷ்குமாரின் உயிரை பறித்த நிலையில் மற்ற 5 தோட்டாக்கள் ஓய்வு அறையின் ஆங்காங்கே விழுந்து வெடித்து சிதறியது.

இந்த நிலையில், இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த மற்ற வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கனரக வாகன தொழிற்சாலை முழுவதும் எதிரொலித்தது. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

உடனே தகவலறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நோக்கி ஓடிவந்தனர். அங்கு கிரிஜேஷ்குமார் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ்மணி வழக்குப்பதிவு செய்து கிரிஜேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர், நிலம்ப சின்ஹாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், நிலம்ப சின்ஹா கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், வடமாநிலத்தில் பணியாற்றி வந்த அவர் திடீரென தமிழகத்தில் உள்ளஆவடி பகுதியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலைக்கு பணி மாறுதலாகி வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் கிரிஜேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் அறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த நிலம்ப சின்ஹாவுக்கு மொழி தெரியாத காரணத்தை வைத்து அவரை கேலி செய்யும் விதமாக பேசி, சிரித்துக் கொண்டும் இருந்துள்ளனர்.

இதனால் நிலம்ப சின்ஹா, கிரிஜேஷ்குமார் உள்பட நண்பர்கள் மேல் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது கிரிஜேஷ்குமார் ஓய்வு அறையில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த நிலம்ப சின்ஹாவுக்கு அது எரிச்சலை உண்டாக்கியதால், ஆத்திரமடைந்த அவர் கிரிஜேஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நிலம்பசின்ஹா தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்கள் இருக்கின்ற இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டதில் கிரிஜேஷ்குமார் மீது குண்டு பாய்ந்து இறந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நிலம்பசின்ஹா சற்று மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததும், அதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் இந்த சூழ்நிலையை பாதுகாப்பு துறைக்கு அவர் தெரியப்படுத்தாமல் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் நிலம்பசின்ஹா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com