

தேனி,
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி நிறுவனங்கள் ஆகியவை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் குவிந்தனர். மொத்தம் 2 ஆயிரத்து 247 பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். மொத்தம் 872 பேர் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 160 பேர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் திறன்வளர்ப்பு பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., வேலைவாய்ப்புத்துறை மதுரை மண்டல இணைப்பதிவாளர் அனுசுயா செல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.