

அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களில் இருந்து விழும் இலைகள் தினமும் சேகரிக்கப்பட்டு மருத்துவமனை அருகே குவியலாக கொட்டி வைத்து தீயிட்டு எரிக்கப்படுகிறது. இவ்வாறு தீயிட்டு எரிப்பதால் புகை வெளியேறுகிறது. இதனால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல் மருத்துவமனை வார்டுகளில் இருந்தும் உணவுக்கழிவுகள், கேண்டீன் மற்றும் விடுதிகளில் சமைத்தது போக மீதமுள்ள காய்கறிகள் மற்றும் அழுகிப்போன காய்கறிகள் போன்ற பொதுக்கழிவுகள் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகிறது.
அவை மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு செல்லும் வழியில் சேகரித்து வைக்கப்பட்டு பென்னாத்தூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வாகனங்களில் வேறு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. குப்பைகள் அகற்றும் வரை அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே இந்த குப்பைகளை உடனுக்குடன் வெளியேற்றுவதுடன், அதனை மறுசுழற்சி மூலம் உரமாக மாற்றுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக பிணவறை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் உணவுக்கழிவுகள், இலைகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட பொதுக்கழிவுகளை கொண்டு வந்து உரமாக மாற்றுவதற்கு தனித்தனியாக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடப்பணி முழுவதுமாக முடிந்து தற்போது தயார் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.