போலீஸ் குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரம் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

சென்னையில் பட்டப்பகலில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் குடியிருப்பில் பட்டப்பகலில் துணிகரம் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வேலைக்கார பெண்ணிடம் விசாரணை
Published on

சென்னை,

சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்வராணி. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவரது மகன் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

இவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர், தினமும் பள்ளி முடிந்தவுடன் இவரது மகனை வீட்டிற்கு அழைத்து வருவார். இதற்காக வீட்டின் சாவியை இன்ஸ்பெக்டர் செல்வராணி வேலைக்கார பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் பிற்பகலில் வழக்கம்போல அந்த வேலைக்கார பெண் செல்வராணியின் மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீட்டிற்கு வந்தவுடன் வேலைக்கார பெண், இன்ஸ்பெக்டர் செல்வராணியிடம் செல்போனில் பேசினார். யாரோ வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று பதறியபடி கூறினார்.

ஆனால் கதவு உடைக்கப்படவில்லை. பூட்டியநிலையில் அப்படியே இருந்தது. அப்படியானால் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் எவ்வாறு கொள்ளை போனது? என்பதில் சந்தேகம் எழுந்தது.

பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் செல்வராணி உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.5 ஆயிரம், 2 செல்போன்கள், 2 கைக்கெடிகாரங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

வீடு பூட்டி இருந்த நிலையில் எவ்வாறு நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது? என்ற சந்தேகம் இன்ஸ்பெக்டர் செல்வராணிக்கு எழுந்தது. அவர் வேலைக்கார பெண் தான் கொள்ளையடித்து கொண்டு நாடகமாடுகிறார் என்று சந்தேகப்பட்டார்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். செல்வராணியின் வீட்டின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் இருந்து வெளியில் செல்வது பதிவாகியிருந்தது. அந்த நபர் தான் கொள்ளையனாக இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

அந்த நபரிடம் வேலைக்கார பெண் வீட்டு சாவியை கொடுத்து கொள்ளையடிக்க உதவி செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். வேலைக்கார பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com