திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார் - தியாகிகளின் வீட்டுக்கு சென்று கவுரவிப்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் விஜயலட்சுமி தேசியக்கொடியை ஏற்றினார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளை, வீட்டுக்கே சென்று அவர் கவுரவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார் - தியாகிகளின் வீட்டுக்கு சென்று கவுரவிப்பு
Published on

திண்டுக்கல்,

நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். அதன்பின்னர் ஆயுதப்படை போலீசார், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய நலப்பணிகள் இயக்குனர் சிவக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதரணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சதீஷ்பாபு மற்றும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த 18 பேர் உள்பட 185 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அதில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கிடையே இந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். மேலும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளும் அழைத்து வரப்படவில்லை. அதற்கு மாறாக தியாகிகளின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இந்த விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி ஜமுனா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகள் புருஷோத்தமன், சரவணன் உள்ளிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பொதுமேலாளர் கணேசன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கினார். அதேபோல் அனைத்து பணிமனைகளிலும் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், கமிஷனர் செந்தில்முருகன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் பொறியாளர் பாலசந்தர், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மேலாளர் ராதாகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் மேலாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com