கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 8–ந் தேதி நடக்கிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 8–ந் தேதி நடக்கிறது
Published on

கன்னியாகுமரி,

நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை வருகிற 8ந் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 5. 45 மணி வரை நடக்கிறது.

இதையொட்டி வருகிற 8ந் தேதி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுகட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடைசாஸ்தா கோவிலில் கொண்டு வந்து வைக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பிறகு அந்த நெல்மணிக்கதிர்கள் அங்கு இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அங்கு அந்த நெல்மணி கதிர்களை பகவதிஅம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

பூஜை முடிந்த பிறகு நெற் கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் தங்கம், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com