நந்திவரம் பஸ்நிலையத்தில் மினிலாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

நந்திவரம் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மினிலாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நந்திவரம் பஸ்நிலையத்தில் மினிலாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நந்திவரம் பஸ் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மினி லாரியின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது மினி லாரி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக போலீசார் பஸ் நிலையத்திற்குள் வந்த பஸ்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை தொட்டியில் இருந்த தண்ணீரை வாளி மூலம் எடுத்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மினி லாரியில் உள்ள தீயை அணைக்க முயன்றனர்.

இது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் போலீசார் நீண்ட நேரமாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் தொடர்ந்து மினி லாரியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே மறைமலைநகரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பிடிக்காமல் இருப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த சம்பவத்தால் நந்திவரம் பஸ் நிலையத்தில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி எப்படி தீப்பற்றி எரிந்தது என்பது பற்றியும், மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என்பது குறித்தும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com