தியாகதுருகத்தில் தேசிய வங்கியில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு கிசான் திட்ட முறைகேடு நடவடிக்கை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்

தியாகதுருகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்றது குறித்த விவரங்களை வங்கி அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
தியாகதுருகத்தில் தேசிய வங்கியில் கலெக்டர் கிரண்குராலா திடீர் ஆய்வு கிசான் திட்ட முறைகேடு நடவடிக்கை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்
Published on

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் விவசாயிஅல்லாதவர்கள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக பணம் பெற்றது தெரிய வந்தது. இவ்வாறு முறைகேடாக பணம் பெற்றவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்றவர்களின் வீடுகளுக்கே சென்று பணத்தை திரும்ப பெற்று வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று தியாகதுருகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வங்கி மேலாளர் ஜெயபிரகாஷிடம் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் எவ்வளவு பேர் முறைகேடாக பணம் பெற்றுள்ளனர். இவர்களில் எத்தனை பேரிடம் இருந்து பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும், பணத்தை திருப்பி செலுத்தாதவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் வனிதா, துணை வேளாண்மை அலுவலர் நல்லகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com