நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

ஊதிய உயர்வு வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மற்றும் கிராம பஞ்சாயத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆபரேட்டர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அரசாணைப்படி கிராம பஞ்சாயத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 725 வழங்க வேண்டும். குடிநீர் ஆபரேட்டர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 725 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாடசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், நிர்வாகிகள் ராஜாங்கம், சுடலைராஜ் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 73 பேரையும் பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குற்றாலம் குடியிருப்பு வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள்ராஜ், அவருடைய மனைவி ஜெயசீலி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் நான் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக்கட்டுபாடு செய்துவிட்டேன். 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதால் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகையும், மகப்பேறு உதவித்தொகையும் வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெரு மக்கள் கணேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை வண்ணார்பேட்டையில் சரிவர சாலைகள் அமைக்கவில்லை. கழிவு நீர் ஓடை சரிவர கட்டப்படவில்லை. இந்த ஓடை கட்டியதில் முறைகேடு நடந்து உள்ளது. மேலும் கழிவு நீர் ஓடைகளில் கழிவு நீர் அகற்றப்படாமல் இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவு நீரை அகற்ற வேண்டும். கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்யவேண்டும் என்று கூறி உள்ளனர்.

திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்பாண்ட சூளை இடம் பிரச்சினை சம்பந்தமாக மனு கொடுத்தனர். மேலப்பாளையம் வசந்தாபுரம் வடக்குத்தெரு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களுடைய வழிப்பாதையில் உள்ள தூண்களை அகற்றவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com