மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா - கலெக்டர் வழங்கினார்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா - கலெக்டர் வழங்கினார்
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 272 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மொத்தம் 62 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்த பாலு என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாலுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, பாலுவின் மகன் வெள்ளிராஜாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை குறைதீர்க்கும் கூட்டத்தில் நேற்று வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமையில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லோகேஸ்வரன், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லை. மக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைமை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேவாரம் பேரூர் செயலாளர் பாரத் அளித்த மனுவில், தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பக்க மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தின் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. மக்கள் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, சேதம் அடைந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அனைத்து கவுண்டர்கள் சமுதாய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை உருவ சிலையை, தேனி அருகே அன்னஞ்சி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியை சேர்ந்த சிறு கைச்சலவை பட்டறை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், சக்கம்பட்டியில் சிறு கைச்சலவை பட்டறை வைத்து குடிசை தொழில் செய்து வருகிறோம். இங்கு வேட்டி, துண்டு ஆகியவற்றை கூலிக்கு சலவை செய்து ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இந்த சலவைப் பட்டறைகள் மீது ஒரு நபர், பொய்யான தகவலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனுவாக அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி சலவைப் பட்டறைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆண்டிப்பட்டி சீனிவாசநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள 25 பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com