டெல்லி குடியரசு தின விழாவில் மராட்டிய அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுப்பு - சிவசேனா கண்டனம்

டெல்லி குடியரசு தின விழாவில் மராட்டிய அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லி குடியரசு தின விழாவில் மராட்டிய அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுப்பு - சிவசேனா கண்டனம்
Published on

மும்பை,

டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. அதுபோல மத்திய மந்திரிகளும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் 16 ஊர்திகள் மாநில அலங்கார ஊர்திகள், மத்திய மந்திரிகள் சார்பில் 6 ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்குவங்காளம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் மராட்டியத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஊர்திகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

2 மாநிலங்களும் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இத்தகைய மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ஆகும்.

குடியரசு தினம் இந்த நாட்டின் விழாவாகும். இதில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும்.

ஆனால் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த 2 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு ஏன் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும்.

இதுகுறித்து முதல்-மந்திரி விசாரணை நடத்தவேண்டும். இதற்கு யார் காரணம் என கண்டறியவேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com