மரக்காணத்தில் ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி மேம்பாட்டு பணிகள்

மரக்காணத்தில் ரூ.161 கோடியில் கழுவேலி ஏரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
மரக்காணத்தில் ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி மேம்பாட்டு பணிகள்
Published on

மரக்காணம்,

மரக்காணத்தில் கழுவேலி ஏரி உள்ளது. இந்த ஏரியானது மரக்காணம் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் அகலம் 10.50 கி.மீ., நீளம் 12.80 கி.மீ, சுமார் 70 சதுர கி.மீ. நீர்பரப்பு உள்ள இந்த ஏரி 8 கி.மீ. நீள முக துவாரத்தின் மூலம் எடையன்திட்டு கழுவேலியில் இணைகிறது. இந்த கழுவேலியானது 10 கி.மீ. நீளத்திற்கு விரிந்து பின் மரக்காணத்தின் வடக்கே கடலுடன் சேர்கிறது.

இந்நிலையில் இங்குள்ள ஏரியில் ரூ.161 கோடி மதிப்பில் கட்டமைப்பு அமைத்து ஏரியை மீட்டெடுத்து தண்ணீரை தேக்குதல், கடல்நீர் உட்புகுதலை தடுத்தல் மற்றும் கடல்நீரை உள்விடாமல் நன்னீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு புதிய தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்து மழைக்காலங்களில் வெள்ளநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துதல், ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

இப்பணிகளை மேற்கொள்வது குறித்து நேற்று தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் சத்யகோபால், அந்த ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த கழுவேலி ஏரியை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு, ஆலப்பாக்கம், கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கழுவேலி ஏரியை சுற்றியுள்ள 51 நீர்பிடிப்பு பகுதிகள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவஹர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com