சங்கரநாராயண சுவாமி கோவிலில் பூஜைகளுக்கான கட்டண உயர்வை குறைப்பது குறித்து உதவி கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் - சமாதான கூட்டத்தில் முடிவு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பூஜைகளுக்கான கட்டண உயர்வை குறைப்பது குறித்து வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை உதவி கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் பக்தர்கள் மனு கொடுக்கலாம் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சங்கரநாராயண சுவாமி கோவிலில் பூஜைகளுக்கான கட்டண உயர்வை குறைப்பது குறித்து உதவி கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் - சமாதான கூட்டத்தில் முடிவு
Published on

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் பல்வேறு பூஜைகளுக்கான கட்டணத்தை நிர்வாகம் உயர்த்தியதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான அப்போதி அடிகளாருக்கு சைவ சித்தாந்த சபைசார்பில் நேற்று முன்தினம் இரவு குருபூஜை நடத்துவதில், அந்த சபையினருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பக்தர்களும் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் நள்ளிரவில் எடுக்கப்பட்ட சுமூக தீர்வின் அடிப்படையில் நேற்று காலையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் குமாரதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கரன்கோவில் தாசில்தார் திருமலை செல்வி, போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், கோவில் துணை ஆணையர் கணேசன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் மற்றும் சைவ சித்தாந்த சபை சுப்பிரமணியன், ஆவுடையம்மாள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் நிர்வாகி சுப்பிரமணியன், கார்த்திகை குழு மாரிமுத்து, கோமதி அம்பாள் மாதர் சங்கம் பட்டமுத்து, நகர ம.தி.மு.க. செயலாளர் ஆறுமுகச்சாமி, நரசிம்ம பூஜை ஏற்பாட்டாளர்கள் கதிர்வேல் ஆறுமுகம், தட்சணாமூர்த்தி பூஜை குழுவை சேர்ந்த கனி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், கோவிலில் கட்டண உயர்வு தொடர்பாக பக்தர்கள் ஆட்சேபனை தெரிவிப்பது தொடர்பாக, கட்டண உயர்வை மாற்றி அமைக்கும் பொருட்டு சைவசித்தாந்த சபை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கோமதி அம்பாள் மாதர் சங்கம், செங்குந்தர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அமைப்பினர், பக்தர்கள் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து விவரங்களுடன் உதவி கலெக்டர், தாசில்தாரிடம் மனு கொடுக்க வேண்டும். பின்னர் உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோர் பரிந்துரையுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் பூஜைகளுக்கான கட்டண உயர்வை குறைப்பது குறித்து இந்து அறநிலையத்துறைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறும் வரை கார்த்திகை பூஜை, பைரவர் பூஜை, சவுபாக்கிய விநாயகர் பூஜை, பழனியாண்டவர் பூஜை, தட்சிணாமூர்த்தி பூஜை, சனீஸ்வரர் பூஜை, நடராஜர் பூஜை ஆகியவற்றை நடத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. சைவசித்தாந்த சபை சார்பில்நடத்தப்படும் 63 நாயன்மார்கள் குருபூஜை சம்மந்தமாக 2 நாட்களுக்கு முன்னதாக, அறநிலையத்துறை நிர்வாகத்திடம் சபை சார்பில் ஒருங்கிணைப்பாளரான தலைவர் மற்றும் செயலர் கடிதம் வழங்க வேண்டும் என்றும், அதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com