தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் நூதன போராட்டம்

தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் நூதன போராட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பழைய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன.

கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் தற்காலிக பஸ் நிலையத்தின் உள்ளே மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மாநகராட்சியை கண்டித்தும் பல்வேறு அமைப்பினர் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி சில பெண்களுடன் தற்காலிக பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் நாற்று நட்டும், தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த காசிலிங்கம், தற்காலிக பஸ் நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி குளியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரை தன் மீது ஊற்றி குளித்தார்.

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கன்றுக்குட்டியை குளிப்பாட்டும் போராட்டம் நடந்தது. மாநகர பொருளாளர் பாலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது, ஒரு கன்றுக்குட்டியை தேங்கி கிடந்த மழைநீரில் குளிப்பாட்டினர். மாநகர குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், நாகராஜன், முத்துகிருஷ்ணன் மற்றும் மனோஜ், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com