

புதுச்சேரி,
புதுவை பல்கலைக்கழகத்தில் 2020-21ம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு, ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பல்வேறு ஆராய்ச்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இதில் விருப்பமான பாட வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.
இதற்கான நுழைவுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 40 நகரங்களில் 73 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. 30 ஆயிரத்து 200 மாணவர்கள் 9 அமர்வுகளாக கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நுழைவுத்தேர்வினை எழுதி வருகிறார்கள். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நிறைவடைகிறது.
இந்த தேர்வுகள் மத்திய அரசு வழங்கிய நிலையான இயக்க நடைமுறை வழி காட்டுதல்படி மாணவர்கள் நலன்கருதி தொற்று நோய் பாதுகாப்பு நடவடிக்கையுடன் நடந்து வருகிறது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து உடல்வெப்ப பரிசோதனை செய்து கிருமிநாசினி பயன்படுத்திய பின்னரே சமூக இடைவெளியுடன் நுழைவுத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.