திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஆலோசனை கூட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுரேந்திர குமார், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தற்போது உள்ள நிலவரம் குறித்தும், கண்காணிப்பு குழுக்கள், ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்படுகிறதா? எனவும், நகை, பணம் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதா?, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்து சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 166 பதற்றம் ஏற்படும் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களாக 175 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 175 நுண் பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகளை கண்காணித்து அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளரிடம் தங்களது அறிக்கைகளை நேரடியாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா, சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நோடல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com