தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கனிமொழி எம்.பி. திடீர் ஆய்வு - நோயாளிகளிடம் குறை கேட்டார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கனிமொழி எம்.பி. நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கனிமொழி எம்.பி. திடீர் ஆய்வு - நோயாளிகளிடம் குறை கேட்டார்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கனிமொழி எம்.பி. நேற்று காலை திடீரென்று வந்தார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை சந்தித்து அவர்களின் தேவைகள், குறைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் நர்சிங் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ்நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியையும், தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். அதிகாரிகளிடம் பஸ்நிலையம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் பாவலன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி மருத்துவர்கள் ஜெயபாண்டி, இன்சுவை, மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் உள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிதாக விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மழை பெய்தால் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குகூட இடமில்லை. மேலும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியவையும் போதுமான அளவில் இல்லை. எனவே, பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி ரெயில் நிலையம், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஆகியவற்றை ஊருக்கு வெளியில் கொண்டு செல்வது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ மசோதாவை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் மத்திய அரசு இங்குள்ள நிலையை புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு மாற்றத்தை கொண்டு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com