தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு
Published on

தூத்துக்குடி,

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று காலை திடீரென தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள காய்ச்சல் நோயாளிகளுக்கான சிறப்பு புறநோய் பிரிவு, காய்ச்சல் வார்டு, குழந்தைகளுக்கான காய்ச்சல் வார்டு உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்துகளை வழங்க வேண்டும் என்று டாக்டர்களை அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் பரிதா செரின், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் பாவலன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர்கள் ஜெயபாண்டியன், இன்சுவை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் சிறப்பு வார்டு, குழந்தைகள் காய்ச்சல் வார்டு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தோம். காய்ச்சல் பாதிப்பு காரணமாக 47 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை வழங்கி வருகின்றனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறார்கள்.

காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாக மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்து டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவாரூர், வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகளவில் உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பாகவே தலைமை செயலாளர் தலைமையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் தலைமையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. வாரத்தில் 2 முறை காணொலி காட்சி மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை மூலம் டெங்கு காய்ச்சல் குறித்து குறும்படங்கள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை ஒரு நிமிடத்துக்குள் கண்டறியும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.25 கோடி மதிப்பில் 860 கருவிகள் வாங்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தரமான பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com