திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து மேலும் 6 பேர் விடுவிப்பு 17 பேர் கண்காணிப்பு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து மேலும் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 17 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து மேலும் 6 பேர் விடுவிப்பு 17 பேர் கண்காணிப்பு
Published on

திருப்பூர்,

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அதன்படி நாடு முழுவதும் 4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு தொழில்கள் இயங்கும் வகையில் ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 6 பேர் கொரோனா தொற்று இல்லாத காரணத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

17 பேர் கண்காணிப்பு

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று சந்தேகம் இருக்கிறவர்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் இருந்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். கொரோனா வார்டில் 23 பேர் நேற்று முன்தினம் வரை கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதில் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு எந்த ஒரு தொற்றும் இல்லாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதனால் கண்காணிப்பில் இருக்கிறவர்களின் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது. 11 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கொரோனா வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், இவர்களுக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளித்து வருகிறோம். இவர்களுக்கு சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com