திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடியில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.1½ கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடியில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரம்
Published on

திருப்பூர்,

தமிழகத்தில் பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது. மேலும் திருப்பூரில் பின்னலாடை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் திருப்பூருக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வேலை தேடி வருகின்றனர். அவ்வாறு திருப்பூருக்கு வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் ரெயில் மூலமாகவே வருகின்றனர்.

மேலும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு தினமும் பலர் ரெயில் மூலமாக வேலைக்கு வந்து செல்கின்றனர். அதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படும்.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் உள்ளன. ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல நடைமேம்பாலம் உள்ளது. நடைமேம்பாலம் நுழைவு வாயிலில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் பயணிகள் சிறிது தூரம் நடந்து சென்று நடைமேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

மேலும் அதில் உள்ள மின்தூக்கி(லிப்ட்) அடிக்கடி பழுதாகி வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பெரும்பாலான பயணிகள் தண்டவாளத்தில் நடந்து ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.

இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும், ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் தொடங்கியது. அதன்படி ரூ.1 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது.

அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் இரும்பு தூண்கள் மூலம் பில்லர் அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று கிரேன் மூலம் ராட்சத இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டு வெல்டிங் வைத்து இணைக்கப்படுகிறது.

இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியின் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி 40 அடி உயரத்தில் நின்று வேலை செய்தனர்.

அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. எனவே ஆபத்தான முறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com