திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
திருத்தணி முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Published on

திருத்தணி,

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் வருகிற 3-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

விழா நாட்களில் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சரவணபொய்கை பிரதான படிக்கட்டுகள் பாதை, மேல் திருத்தணியில் உள்ள நல்லான்குளம் படிக்கட்டுகள் பாதை ஆகியவற்றின் வழியாக மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

இந்த இரண்டு பாதைகளையும் ஆக்கிரமித்து பலர் கடைகள் வைத்து உள்ளனர். இதனால் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் என்பதால், அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கோவில் நிர்வாகம் நேற்று காலை அதிரடி நடவடிக்கைள் மேற்கொண்டது. அதன்படி திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் தலைமையில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் போலீசார் உதவியுடன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள், மலைக்கோவில் பஸ் நிலையம் மற்றும் தேர் வீதி பகுதி உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார்கள். மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com