திருச்சி தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை - திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீத முடிவு

திருச்சியில் தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை - திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விபரீத முடிவு
Published on

திருச்சி,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சூரக்குழி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 33). மயக்கவியல் டாக்டரான இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

டாக்டர் சரவணனின் திருமணத்துக்கு அவருடைய பெற்றோர் பெண் தேடி வந்தனர். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையில் 4-வது தளத்தில் உள்ள அறைக்கு சென்ற அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசியை போட்டுக் கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியதால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கிடந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து டாக்டர் சரவணனின் தந்தை செல்வராஜ் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் அவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரம் ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com