

வேலூர்,
இந்தியாவில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மணல் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து ஜெயிலில் அடைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் குற்றவாளிகளை பிடிக்க முயலும் வேளையில் போலீசார் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மேலும் இந்தியாவிற்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை பிடிக்க முயலும் போதும் போலீசார் உயிரிழக்கின்றனர்.
இவ்வாறாக காவல்துறை பணியின்போது பல்வேறு காரணங்களால் வீரமரணமடையும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை பணியின்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு நேற்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கடந்தாண்டு பணியின்போது 292 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் யாரும் வீரமரணம் அடையவில்லை.
இவ்வாறு பணியின்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று முன்தினம் வேலூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.