மாட்டுக்கறி சாப்பிட்ட வாலிபரை தாக்கிய வழக்கு: மேலும் பலருக்கு போலீசார் வலைவீச்சு

மாட்டுக்கறி சாப்பிட்ட வாலிபரை தாக்கிய வழக்கில் மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மாட்டுக்கறி சாப்பிட்ட வாலிபரை தாக்கிய வழக்கு: மேலும் பலருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பொரவச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன். இவருடைய மகன் முகமது பைசன்(வயது 24). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று கூறி மாட்டுக்கறி சாப்பிடுவது போல் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட்டார்.

இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சிலர், சம்பவத்தன்று பொரவச்சேரி மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த முகமது பைசனிடம், ஏன் இதுபோன்ற வீடியோவை முகநூலில் பதிவிடுகிறாய்? என கேட்டு இரும்பு கம்பி மற்றும் உருட்டுகட்டைகளால் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லக்மணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பைசனை தாக்கியதாக பொரவச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த தினேஷ்குமார்(28), செட்டி தெருவை சேர்ந்த அகத்தியன்(29), மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்(29), நல்லமுத்து முதலியார் தெருவை சேர்ந்த மோகன்குமார்(28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று முன்தினம் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் மேலும் பலரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாட்டுக்கறி உடலுக்கு நல்லது என்று கூறி முகநூலில் வீடியோ பதிவிட்ட வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com