

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசின் அறிவுறுத்தல்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஷ்ரா நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் ஆய்வு செய்தார். அவர், கொரோனா தொற்றினால் லேசான பாதிப்புக்கு உட்பட்டவர்களை பாதுகாத்து சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை பார்வையிட்டார். அங்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை வரவழைத்து வகைப்படுத்தும் மையத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டார். தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவியர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை பார்வையிட்டு அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா முறையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கான உதவி மையத்தை பார்வையிட்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், ஆக்சிஜன் தேவை குறித்தும், மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்தும், கொரோனா சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், அதில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், மேலும் கூடுதலாக உருவாக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் படுக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஷ்ரா பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார்.
எனவே நமது மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு பொதுமக்களை பாதுகாக்க அறிவிக்கப்பட்டு உள்ளதாகும். அதனை தீவிரமாக கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். அரசு இடங்களில் கொரோனா நோயாளிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது போன்று, தனியார் கல்லூரி போன்ற இடங்களிலும் கொரோனா பாதுகாப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் மக்களை காக்கும் பணிகளில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் முத்துவேல், துணை இயக்குனர் அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.