ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்

ஆவடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்
Published on

ஆவடி,

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர், ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

உடனடியாக அவர்கள், முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபு ஆகியோர் திருநின்றவூர் போலீசார் உதவியுடன் ஏ.டி.எம். எந் திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கட்டிங் எந்திரம், கடப்பாரை, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருநின்றவூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், திருநின்றவூரை அடுத்த பக்கம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த உதயசூரியன் (வயது 32) என்பது தெரிந்தது. டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ள அவர், ரோஸ்லின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த உதயசூரியன், அந்த கம்பெனியை மூடிவிட்டதால் அதில் கிடைத்த பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் நஷ்டம் அடைந்தார். இதனால் அதிகம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர், யூ டியூப்மூலம் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிப்பது எப்படி? என்பதை பார்த்து அதன்படி கடந்த அக்டோபர் முத்தாபுதுப்பேட்டையை அடுத்த காவனூர் பகுதியில் உள்ள இந்தியா ஒன் என்ற ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்தை கொள்ளையடித்து உள்ளார்.

அதில் ரூ.2 லட்சத்தை மீண்டும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து இழந்து விட்டார். கையில் இருந்த மீதி பணமும் செலவழிந்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு முத்தாபுதுப்பேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com