கோவை அருகே பறக்கும் படை அதிரடி, ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல்

கோவை அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை அருகே பறக்கும் படை அதிரடி, ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடி பறிமுதல்
Published on

சூலூர்,

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு சென்றால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சூலூரை அடுத்த சோளக்காட்டுபாளையம் அருகே மாவட்ட வரை கலை அலுவலர் ரவி மூர்த்தி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு வேன் வந்தது. அந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் இருந்த இரும்பு பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதில் மொத்தம் 1 கோடியே 98 லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் வேனில் இருந்தவர்களிடம் இல்லை.

கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் இருந்து சூலூரை அடுத்த வாகராயம்பாளையம் பகுதிக்கு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப எடுத்து செல்லப்பட்டதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி அலுவலர் ஜெயராஜ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் சூலூர் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com