ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.38 ஆயிரம் அபேஸ்

அரக்கோணத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து சத்துணவு பணியாளர் வங்கிக்கணக்கில் ரூ.38 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.38 ஆயிரம் அபேஸ்
Published on

அரக்கோணம்,

அரக்கோணம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இளவரசி (வயது 30), சுவால்பேட்டையில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இளவரசி அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்த போது பணம் வரவில்லை. அருகில் இருந்த ஒரு வாலிபர் கார்டை, சரியாக பொருத்த வேண்டும் என்று கூறி கார்டை வாங்கி ஏ.டி.எம்.மில் சொருகினார். ரூ.2 ஆயிரம் வந்தபோது இளவரசி அதை எண்ணி எடுத்து கொண்டார்.

பின்னர் அந்த வாலிபர் ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுத்தார். பணத்தை எடுத்து கொண்டு இளவரசி வீட்டிற்கு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரது செல்போன் எண்ணுக்கு வங்கிக்கணக்கில் ரூ.38 ஆயிரம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளவரசி கார்டை எடுத்து கொண்டு வங்கி மேலாளரிடம் சென்று தெரிவித்தார்.

வங்கி மேலாளர் கணக்கை சரிபார்த்த போது அரக்கோணம், பழனிப்பேட்டை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.38 ஆயிரம் எடுத்து இருப்பது தெரிய வந்தது. மேலும் இளவரசி கொடுத்த ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது அந்த கார்டு வேறு நபருக்கு சொந்தமானது என்பதும் தெரிந்தது.

இதுகுறித்து இளவரசி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com