ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: சென்னையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கைது

காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் சென்னையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: சென்னையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கைது
Published on

சென்னை,

காஞ்சீபுரம் மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த அலாரம் அடித்தது. இதனால் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதன்காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.

இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், அசோகன் மற்றும் போலீசார் கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்தவர், காஞ்சீபுரம் திருகாலிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது, அங்கிருந்த வாலிபரை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பிடிபட்ட வாலிபர், காஞ்சீபுரம் மாமல்லன் நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் பிடிபட்டவர், சென்னை கொளத்தூரை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கணேசா (வயது 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 கேமராக்கள், 2 ஸ்டெப்லைசர்கள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள் இயங்க தேவைப்படும் மின்சார சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசா, காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதையொட்டி கணேசா காஞ்சீபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com