காங்கிரஸ் பொதுச் செயலாளரை கொல்ல முயற்சி காரை வழிமறித்து தாக்கிய கும்பலால் பரபரப்பு

புதுச்சேரியில் காரை வழிமறித்து தாக்கி காங்கிரஸ் பொதுச் செயலாளரை கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் பொதுச் செயலாளரை கொல்ல முயற்சி காரை வழிமறித்து தாக்கிய கும்பலால் பரபரப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர் ஏ.கே.டி. ஆறுமுகம். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்திராநகர் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது வீடு கம்பன் நகர் வயல்வெளி பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அய்யங்குட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரில் டிரைவரும், ஏ.கே.டி.ஆறுமுகமும் மட்டும் இருந்தனர்.

கம்பன் நகர் ரெயில்வே கேட்டை அடுத்த புறவழிச்சாலையில் வந்தபோது சாலையில் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டு இருந்தன. இதைப்பார்த்ததும் காரின் வேகத்தை டிரைவர் குறைத்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் ஏ.கே.டி.ஆறுமுகத்தின் காரை நோக்கி வந்தனர். இதில் 2 பேர் திடீரென கற்களை வீசி எறிந்தனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

உயிர் தப்பினார்

இதனால் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என சுதாரித்த டிரைவர் வேகமாக காரை எடுக்க முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் ஓடி வந்து ஏ.கே.டி.ஆறுமுகம் இருந்த பகுதியில் வெட்ட முயன்றார். அப்போது கார் வேகமாக சென்றதால் அந்த வெட்டு காரின் பின்பக்க பக்கவாட்டு கண்ணாடியில் விழுந்தது. இதில் கண்ணாடி நொறுங்கியது.

டிரைவர் காரை நிற்காமல் ஓட்டிச் சென்றதால் மயிரிழையில் ஏ.கே.டி. ஆறுமுகம் உயிர் பிழைத்தார். அவரது கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நாராணசாமி உத்தரவு

இதுபற்றி தகவல் அறிந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சம்பவ இடத்திற்கு சென்று ஏ.கே.டி.ஆறுமுகத்தை பார்த்து ஆறுதல் கூறினார். போலீசாரிடம் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை உடனடியாக கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.கே.டி.ஆறுமுகத்தை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்க வந்தவர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிப்பதுடன் அந்த ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகத்தை மர்ம கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம் புதுவையில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com