காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் வர அனுமதி மறுப்பு: தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயற்சி

காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் வர அனுமதிக்க மறுத்து தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் வர அனுமதி மறுப்பு: தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயற்சி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த தொகரப்பள்ளியை சேர்ந்தவர் முகிலன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருசக்கர வாகன விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர். சாருமதி (19). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் காதல் தம்பதி சென்னைக்கு சென்றுவிட்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காதல் தம்பதி தனது குழந்தையுடன் முதல் முறையாக கடந்த மாதம் 21-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தனர். அப்போது காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பஞ்சாயத்தில் ரூ.25 ஆயிரம் கட்ட வேண்டும் என்று இரு குடும்பத்தினரிடமும் கேட்டு வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் சிலர் இவர்கள் இருவரையும் எங்களை கேட்காமல் ஏன் வீட்டில் சேர்த்தீர்கள் என்று முகிலனின் பெற்றோர் மற்றும் சாருமதியை மிரட்டி, அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் காதல் தம்பதியை ஊருக்குள் வர அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து முகிலனின் தந்தை கருணாநிதி மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அதேபோல அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில்காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்குள் வர அனுமதிக்க மறுத்து, தகராறு செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முகிலன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவி சாருமதி மற்றும் ஒரு வயது பெண் குழந்தை, பெற்றேர் ஆகியோருடன் வந்தார். அங்கு தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு முகிலன் தீக்குளிக்க முயன்றார்.

இதைகண்ட அங்கு பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீக்குளிப்பு சம்பவத்தை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை விசாரணைக்காக போலீசார், அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து முகிலனின் மனைவி சாருமதி, மாவட்ட வருவாய் அலுவலர் சதீசிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com