ஏனாம் பகுதியை ஆந்திராவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது - கவர்னர் கிரண்பெடி கண்டனம்

ஏனாம் பகுதியை ஆந்திராவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று கவர்னர் கிரண்பெடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏனாம் பகுதியை ஆந்திராவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது - கவர்னர் கிரண்பெடி கண்டனம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாமை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது என்று சிலர் தனது சொந்த நலனுக்காக தவறான தகவல்களை பரப்புவதாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது. அதில், இது தொடர்பாக கவர்னர் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஏனாம் மக்களுக்கு தேவையான நல்ல குடிநீர் தருவது, ஏழைகளுக்காக குடும்பநலம் மற்றும் நல்ல சுகாதாரத்தை தருவது, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்ய தவறியதில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றே ஏனாம் மக்களின் கவனத்தை இதில் இருந்து திசை திருப்புவதற்காக இது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்.

நான் ஏனாம் சென்றபோது மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது என்று ஏனாம் நிர்வாகத்திடம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தினேன். சுற்றுச்சூழல் விதிகள் அதிக அளவில் மீறப்பட்டுள்ள ஏனாமில் நான் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டேன். இது சம்பந்தமாக ஏனாம் பகுதியை சேர்ந்த சில மக்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை அடிப்படையாக கொண்டு சென்னை ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் ஏனாம் பிரச்சினைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளாலும், நிர்வாகத்தின் கள அதிகாரிகளாலும் தினமும் தீர்வு காணப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏனாம் பகுதி மக்கள் தொகை 55,625. இது புதுவையின் மிக சிறிய பகுதி என்று அடையாளம் காணப்பட்டது. மத்திய அரசு இந்த பிராந்தியத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் சிறப்பு நிதிஉதவி திட்டங்கள் மூலம் ஏனாம் பிராந்தியத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.187 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிதியை நியாயமான முறையில் பயன்படுத்தியதை உறுதி செய்வதற்காக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். இதற்காக அனைத்து துறையின் செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களை 3 மாதத்திற்கு ஒரு முறை ஏனாம் சென்று ஆய்வு செய்து ஆய்வறிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளேன். என்ன நடந்துள்ளது என்பதை பரிசீலிக்க ஜனவரி மாதத்தில் நான் மீண்டும் ஏனாம் செல்ல உள்ளேன்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com