கரூர் அருகே நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி தாய் கையை அறுத்து தற்கொலை முயற்சி

கரூர் அருகே நொய்யல் ஆற்றில் , குழந்தையை வீசிய தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் அருகே நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி தாய் கையை அறுத்து தற்கொலை முயற்சி
Published on

நொய்யல்,

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சத்யா (வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பிறந்து 14 மாதங்களே ஆன டிஜய் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்யா தனது குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார். கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் குழந்தையை தூக்கிக்கொண்டு சத்யா நடந்து வந்துள்ளார்.

அப்போது கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள நொய்யல் ஆற்றுபாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென நடுப்பாலத்தில் நின்று தன் கையில் வைத்திருந்த குழந்தை டிஜய்யை நொய்யல் ஆற்றின் தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார்.

பின்னர் தானும் ஆற்றில் குதிப்பதற்காக பாலத்தின் மீது சத்யா ஏற முயன்றார். ஆனால் அவரால் பாலத்தின் மீது ஏற முடியாததால் கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கையில் ரத்தம் கொட்டியதாலும், பசியால் இருந்ததாலும் மயக்கம் அடைந்து சத்யா கீழே விழுந்தார்.

இதனை பாலத்தின் அருகே உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் பார்த்து அங்கு ஓடி வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அந்த வழியாக வந்தவர்கள் சத்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.

இதனால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் குழந்தையை தேடும் பணி நடைபெறும். இதுகுறித்து வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பூபதி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் நொய்யல் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com