எச்.ராஜா உருவப்படத்தை எரித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் எச்.ராஜா உருவப்படத்தை எரித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எச்.ராஜா உருவப்படத்தை எரித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோர்ட்டு தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையொட்டி நெல்லையில் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு வளாகம் முன்பு உள்ள திருச்செந்தூர் மெயின் ரோட்டுக்கு வந்தனர்.

அங்கு நடுரோட்டில் திரண்டு நின்று எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது எச்.ராஜா உருவப்படத்தை தீவைத்து எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ரமேஷ், அப்துல் ஜப்பார், பழனி, சுதர்சன், நயினார், மாரிமுத்து, சுவாமிநாதன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மூத்த வக்கீல் ரமேஷ் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலத்துக்கு சென்னை ஐ கோர்ட்டு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்தநிலையில் ஊர்வலத்தை தொடங்கி வைக்க வந்திருந்த எச்.ராஜா, ஐகோர்ட்டு மற்றும் போலீசார் குறித்து விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்து உள்ளனர். ஆனால் அவரை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு, எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த போராட்டத்தின் போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com