ஆடி அமாவாசை: கொரோனா தாக்கத்தால் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களின்றி வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

கொரோனா தாக்கத்தால் ஆடி அமாவாசையான நேற்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களின்றி மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி அமாவாசை: கொரோனா தாக்கத்தால் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களின்றி வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து இறந்த தங்கள் குடும்ப மூதாதையர்களின் ஆசி கிடைக்க தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடுவர்.

கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் கடலில் குளிக்கவும், மக்கள் கூட்டமாக திரளவும் காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று பலர் தர்ப்பணம் கொடுக்க மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து அர்ச்சகர்கள் மூலம் தங்கள் வீட்டிலேயே மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க மக்கள் வராததால் மாமல்லபுரம் கோவிலுக்கு வடக்கு பக்க கடற்கரை பகுதி நேற்று மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள புஷ்கரணி தெப்ப குளக்கரையில் ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்து வந்து தங்கள் குடும்ப மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர்.

தலசயன பெருமாள் கோவில்

ஆண்டுதோறும் தர்ப்பணம் கொடுக்கும் மக்கள் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு செல்வர்.

இந்த ஆண்டு கோவிலும் மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த பலர் கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த உடன் அடுத்து சில மாதங்கள் கழித்து வரும் தை அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்கள் பசுக்களுக்கு கொடுப்பதற்காக கடற்கரை கோவில் சாலையில் தற்காலிக சாலையோர அகத்தி கீரை கடைகள் திறக்கப்பட்டு இருக்கும்.

கொரோனா ஊரடங்கால் நேற்று அகத்தி கீரை கடைகள் திறக்கப்படவில்லை. பூ, பழம், தேங்காய் வியாபாரமும் களையிழந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com