ஆடிட்டர் அலுவலக ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை

தாராபுரத்தில் கடன் தொல்லை காரணமாக ஆடிட்டர் அலுவலக ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலைசெய்து கொண்டார். அவர் எழுதி வைத்துச் சென்ற உருக்கமான கடிதம் சிக்கியது.
ஆடிட்டர் அலுவலக ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை
Published on

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் காளிதாஸ் (வயது 44) பி.காம் படித்து முடித்துவிட்டு, ஆடிட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராதாமணி. இவர் சுண்ணாம்புக்காடு சாலையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு தேஸ்அஸ்வின் (13) என்கிற மகனும், சுவேதாமாலா (9) என்கிற மகளும் உள்ளனர்.

காளிதாசுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அவரால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் இவர்களுடைய குழந்தைகள் சென்னிமலையில் உள்ள ராதாமணியின் சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ராதாமணி வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த காளிதாஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் மாலையில் ராதாமணி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டுனுள் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காளிதாசை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு காளிதாஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் காளிதாஸ் எழுதி வைத்து இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் மனைவிக்கும் நண்பர்களுக்கும் உருக்கமாக எழுதியிருப்பதாவது:-அன்பு மனைவிக்கு என்னால் இனிமேல் வேலைக்குச் செல்ல முடியாது. நீயும் குழந்தைகளும் பத்திரமாக இருங்கள். உங்களை விட்டுச் செல்கிறேன். நண்பர்களே உங்களை விட்டுச் செல்கிறேன். எனக்கு அதிக கடன் தொல்லை ஏற்பட்டு விட்டது. எனக்கு இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் உள்ளது.

இந்த பணத்தை எடுத்து கடனை அடைத்துக் கொள்ளவும். எனது பெயரில் காப்பீட்டுத் தொகை உள்ளது. அதை எடுத்து குழந்தைகளின் எதிர்கால செலவுக்கு வைத்துக்கொள்ளவும் . என்னால் இனி வாழமுடியாது. நான் உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com