திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்
Published on

திருப்பத்தூர்,

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ஆண்டாள், பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து திருவிழாவையொட்டி தினந்தோறும் காலையில் சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. அதன்படி திருவிழாவில் 9 நாட்களும் ஆண்டாளும், சவுமியநாராயண பெருமாளும் சிம்மம், அனுமார், கருடசேவை, சேஷ வாகனம், தங்கப்பல்லக்கு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தேரோட்டம்

திருவிழாவின் 10-ம் நாளான நேற்று(வியாழக்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 8.10 மணிக்கு மேல் 8.56 மணிக்குள் சாமி திருத்தேர் எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது. அப்போது தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள், திருத்தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவிழாவின் 11-ம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் ஆசீர்வாத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பாளர் சேவர்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com