ஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

ஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்கள் கையேடு பயன்படுத்த தடை : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
Published on

திருவண்ணாமலை,

பள்ளி மாணவர்கள் கையேடுகளை பயன்படுத்தி பாடம் படிக்கின்றனர். இதனால் அவர்களின் சிந்தனைத்திறன் வளராமல் இருக்கிறது. மனப்பாடம் செய்து தேர்வில் எழுதி வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அவ்வாறு படிப்பதால் அவர்கள் உயர்கல்வி படிக்கும் போது பாடம் புரியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடுகளை பள்ளியில் பயன்படுத்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மாணவர்கள் பாடநூல்களில் இருந்து குறிப்பெடுத்து படிப்பதனால் பாடங்களை தெளிவாக புரிந்து கொள்வார்கள். இவ்வாறு குறிப்பெடுக்கும் பழக்கம் இருந்தால் சிந்தனைத் திறன், கேள்வி கேட்கும் திறன் வளரும். தாமாக கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனப்பாடம் செய்து படித்தால் அது உயர்கல்விக்கு உதவாது. குறிப்பெடுத்து படிப்பதால் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

கையேடுகளை பயன்படுத்துவதனால் மாணவர்கள் தங்களது சிந்தனைத் திறனை வளர்க்க முடியாது. ஆசிரியர்களும் கையேடு பயன்படுத்தாமல் பாடம் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் பாடங்களுக்கு கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்த மாட்டோம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டங்கள் நடத்தியும் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். பெற்றோரும் தங்களது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கையேடுகளை வாங்கி கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com