

புதுச்சேரி,
புதுச்சேரி சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 33). இவர் ஆட்டோக்களை வாடகைக்கு விடுவதுடன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார். இவரிடம் வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கர்(40) வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளில் வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கரை குத்தி கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணியை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ்மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார்.