

தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை அமைதியாக நடத்தவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவும் துணை ராணுவ படை பிரிவை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 90 பேர் தேனிக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து துணை ராணுவ படைவீரர்கள், தேனி மாவட்ட ஆயுதப்படை போலீசார், சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலைய போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைபிரிவு போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேனி வரை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
2-வது நாளாக நேற்றும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் தேனியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் தேனி பங்களாமேட்டில் தொடங்கியது.
ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் பழைய பஸ் நிலையம், கம்பம் சாலை வழியாக பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் வரை சென்றது. ஊர்வலத்தில் துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவ படையினர் சென்றனர்.