ஆவடி மாநகராட்சியை ‘ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றுவேன் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கே.பாண்டியராஜன் வெளியிட்டார்

குடிநீர், சாக்கடை பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும், ஆவடி மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்படும் என்றும் ஆவடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடி மாநகராட்சியை ‘ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றுவேன் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கே.பாண்டியராஜன் வெளியிட்டார்
Published on

சென்னை,

ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக, அமைச்சர் கே.பாண்டியராஜன் நிறுத்தப்பட்டு உள்ளார். ஆவடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளாக அந்த தொகுதியில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேர்தல் முடிந்து 100 நாட்களில் நிறைவேற்றப்பட உள்ள பணிகள் குறித்த அறிக்கை ஆகியவற்றை பருத்திப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஆவடி குடியிருப்போர் பொதுநலச் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். ஆவடியில் 32 ஆயிரத்து 703 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 49 ஆயிரம் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆயிரம் பக்தர்கள் தங்கும் அளவுக்கு ஏற்ப ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டித் தரப்படும். ஆவடி மாநகராட்சி பகுதி மற்றும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் ரூ.43 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக உள்ள கோவில் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி ரெயில் நிலையத்தில் முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் 5 மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என்பது உள்ளிட்ட 14 அறிவிப்புகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.

ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்

* ஆவடி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

* ஆவடி தொகுதியில் தாலுகா நீதிமன்றம் உருவாக்கப்படும்.

* திருநின்றவூர் பகுதிகளில் பலவகை தொழில்நுட்பக்கல்லூரி உருவாக்கப்படும்.

* பூந்தமல்லி பகுதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள மெட்ரோ ரயில் பட்டாபிராம் ஐ.டி. பார்க் வரை நீட்டிக்கப்படும்.

* ஆவடி தொகுதியில் உள்ள கோவில் குளங்கள் மற்றும் சிறு குளங்கள் தூர்வாரி நிலத்தடி நீர் சேகரிக்கும் ஆதாரமாக உருமாற்றப்படும்.

* திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

* 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாநகராட்சியில் 8-வது இடம் வகிக்கும் ஆவடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றம் செய்யப்படும்.

* ஆவடி தொகுதியில் கூடுதலாக 5 இடங்களில் மின்னணு நூலகம் அமைத்துத்தரப்படும்.

நீட் தேர்வு பயிற்சி மையம்

* அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட்' தேர்வு பயிற்சி மையம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படும்.

* ஆவடி தொகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய மினி ஸ்டேடியம்' அமைக்கப்படும்.

* திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு வருகைபுரியும் பக்தர்களை கவரும் வண்ணம் அயனம்பாக்கம் ஏரி சுற்றுலாதலமாக தரம் உயர்த்தப்படும்.

* மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்துத்தரப்படும்.

* பூங்காக்கள், பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் வைபை' வசதி செய்து தரப்படும்.

* ஆவடியின் பிரதான இடத்தில் நவீன அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்படும்.

* சாலையோர வணிகர்களுக்கு வழங்கும் ரூ.10 ஆயிரம் கடன்தொகை விரிவுபடுத்தப்படும்.

ஆவடியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

* ஆவடி அரசு பொதுமருத்துவமனை 5 மாடிகளுடன் 110 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* டைடல் பார்க்கில் மொத்தம் ரூ.303 கோடியில் தொங்கும் தோட்டக்கட்டிட அமைப்பில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

* ஆவடி என் தாய் மடி என்ற வாக்கியத்தை எனது தாரக மந்திரமாக கொண்டு ஆவடி தொகுதியை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக உருமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com