மார்க்கெட்டுகளில் மக்கள் திரள்வதை தவிர்க்க குடியிருப்பு பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை - கடலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

மக்கள் மார்க்கெட்டு களில் திரள்வதை தடுக்க குடியிருப்பு பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பணியை கடலூரில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று தொடங்கி வைத்தார்.
மார்க்கெட்டுகளில் மக்கள் திரள்வதை தவிர்க்க குடியிருப்பு பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை - கடலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் விசாலமான இடங்களுக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து செல்கின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதை பெரும்பாலான பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. இதை கட்டுப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடலூர் நகரில் 3 வாகனங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரடியாக சென்று காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதை நேற்று கடலூர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக காய்கறிகள் கடலூர் நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரடியாக வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்து சென்று விற்பனை செய்ய உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ,பெண்ணாடம் ஆகிய நகரப்பகுதிகளில் தலா 2 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கிராமப்புறங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது. ஆகவே காய்கறிகளை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பு துறை மூலம் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கடலூர் மாவட்டத்திலிருந்து வெளிநாடு சென்று வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்க படுவார்கள். ஆகவே பொதுமக்கள் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் யாராவது வெளியில் நடமாடினால் அவர்களைப்பற்றி 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதேபோல் காவல்துறையினர் 24 மணி நேரமும் உங்களுக்காக வெயிலையும் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் துப்புரவு பணியாளர்கள், டாக் டர்கள், செவிலியர்களும் உங்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஆகவே அவர்களின் சேவைக்கு மதிப்பளித்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் தயவுசெய்து தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com