ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி

ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க ‘மல்டி லெவல் பார்க்கிங்’ வசதி
Published on

ஊட்டி,

சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று தினத்தந்தி நிருபருக்கு ஊட்டியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தர உள்ளதால், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டியில் சீசனுக்கு தேவையான குடிநீர் போதிய அளவு இருப்பு உள்ளது. பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்ட பணிகளும் நடந்து வருகின்றன. குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குன்னூர் பகுதிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் அணைகளில் நீர்க்கசிவு ஏற்படுவதை முழுமையாக தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சீசன் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய முடியும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ், நலிந்தோர், விதவைகளுக்கான சான்றிதழ்கள் இ-சேவை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக நிலம் சம்பந்தமான சிட்டா, அடங்கல் சான்றிதழ் இ-சேவை மையத்தின் மூலம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் இ-சேவை மையம் மூலம் சான்றிதழ் வழங்குவதில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது.

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் வருவதால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தி உள்ளேன். ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

மாநாட்டில் கூடலூரில் உள்ள செக்ஷன்-17 நிலத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி தெரிவித்தேன். இதற்கு மாநில அளவில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ வசதிக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் புதியதாக கட்டிட வசதி ஏற்படுத்தவும், திருப்பூர், கோவையில் இருந்து மயக்கவியல் டாக்டர்கள் இந்த மருத்துவமனைக்கு தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க தடையாணை உள்ளதால், ஒரு முறை சிறப்பு சலுகை அளித்து பட்டா வழங்க வேண்டும் என்று மாநாட்டில் தெரிவித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com