ஆஸ்பத்திரிகளில் தனது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி கலெக்டர்கள் விழிப்புணர்வு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆஸ்பத்திரிகளில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்கள் தங்களது குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆஸ்பத்திரிகளில் தனது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி கலெக்டர்கள் விழிப்புணர்வு
Published on

சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வசதியாக போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. அவ்வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 721 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கலெக்டர் விழிப்புணர்வு

இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தனது இரு குழந்தைகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனது கையால் போலியோ சொட்டு மருந்து அளித்து முகாமை தொடங்கி வைத்தார். இதன் பின்னர், அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி சிறப்பித்தார். மாவட்ட கலெக்டர் தனது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து அளித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு

அதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

மேலும் அப்போது அவர், தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை செலுத்தி பொதுமக்களுக்கு போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெ.முத்துகுமரன், அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com