அயோத்தியில் ராமர்கோவில் கட்ட சிவசேனா ரூ.1 கோடி வழங்கியது

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட ரூ.1 கோடி வழங்கப்பட்டு இருப்பதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.
அயோத்தியில் ராமர்கோவில் கட்ட சிவசேனா ரூ.1 கோடி வழங்கியது
Published on

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த மார்ச் மாதம் அயோத்தி சென்று ஆரத்தி வழிபாடு செய்தார். அப்போது, ராமர் கோவில் கட்டுவதற்கு சிவசேனா சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறுகையில், சிவசேனா தான் வாக்குறுதி அளித்தபடி ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு சிவசேனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான அனில் தேசாய் கூறியதாவது:-

சிவசேனா தான் அளித்த வாக்குறுதிபடி ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.1 கோடியை வழங்கி விட்டது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது. பணம் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி சான்றை அறக்கட்டளையின் பொருளாளர் அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அறக்கட்டளை தலைவர் கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com