

திண்டுக்கல்:
தஞ்சாவூர் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 44). இவர் தஞ்சாவூரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக திண்டுக்கல் வழியாக நடந்து சென்றார். நேற்று திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டிவீரன்பட்டி அருகே சுந்தரராஜபுரம் பிரிவு என்னுமிடத்தில் வத்தலக்குண்டு நோக்கி சிங்காரகோட்டை அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்த தினேஷ் கண்ணன் (22), காளிமுத்து (21), சூர்யா (23) ஆகிய 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் மகேந்திரன் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் அவர் கீழே விழுந்தார். அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.