கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
Published on

கன்னியாகுமரி,

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.

மண்டல பூஜைக்காக சபரிமலையில் நேற்று முன்தினம் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிய தொடங்கினர்.

கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று காலையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இதையொட்டி பகவதி அம்மன் கோவில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்குள்ள தர்மசாஸ்தா சன்னதியிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அந்த சன்னதியில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் ஸ்ரீனிவாசன் போற்றி, ஸ்ரீதர் போற்றி ஆகியோர் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை, காந்தி மண்டப சாலை, பஸ் நிலையங்கள் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறைமுக பகுதியில் குவிந்திருந்தனர்.

அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பக்தர்களை கண்காணித்தனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காந்தி மண்டபம் முன் புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க கடலில் மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரியில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் வாகனங்கள் 4 வழிச்சாலை வழியாக வரும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இருந்தாலும் நேற்று கன்னியாகுமரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று காலையில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலையிலேயே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பிறகு மாலை அணிந்தனர்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com